Monday, December 4, 2017

மாயா-67
சிறகுகளின் மேலாடை பீய்த்திருந்த
இரவுகிளியொன்று
என் அறைக்குள் தஞ்சம்
அடைந்தது

அதன் அலகுகளில்
கூடுதல் சிவப்பு இருந்தது

நகங்கள் மழுங்கிய கால்களில்
வறண்ட ஆற்றின் ஈரமில்லாத மணல்துகள்கள் உதிர்ந்தன

பசியென கண்களுக்குள்
கூர்மையான கருவேல முட்களாய் என்னை
குத்தத்தொடங்கியன

அழும் குழந்தையின்
பசி போக்க தன் விரலை
சப்ப கொடுக்கும் தாயென
சிறிதுசிறிதாக நறுக்கப்பட்ட
கனிகளாக அதன் முன்னே
படுத்துக்கிடக்கிறேன்

முதல் துண்டை விழுங்கிய
பின்
சிறகுகளில் காட்டின் வாசம்
துளிர்க்க தொடங்கியது

என் படுக்கை அறையில்
நான் இல்லாமல் இருந்தேன்

சூரிய கதிர்களால் என் பகல திறக்க
வனத்தின் மரக்கிளையில்
தன் அலகுகளை துவட்ட
வானமெங்கும்  கமழ்ந்த்து
கனியின் மணம்

No comments:

Post a Comment