Sunday, December 20, 2015

கோபம்.

நிறைய
மரணங்களைப் பார்த்துவிட்டேன்
மரணங்களுக்குள்
பதுக்கப்பட்ட
சூழ்ச்சிகளையும் துரோகத்தையும்
ஊரறிய நட்டு வைத்து இருக்கிறார்கள்
நெடுஞ்சாலையின்
இருமருங்கிலும் நிழலற்ற மரமென
என்
விதைகளை நசுக்கியப்பின்னும்
ஓர் அங்குலம் கூட எழும்பவில்லை
என் முஷ்டி
தலைக்குனிந்து கிடக்கிறேன்
பூனையின் முகத்தில்
வளருகின்றன என் மீசைகள்
பயன்படுத்தப்  படாத
பிளேடால்
கைகளைக் கோடு கோடாக
 நறுக்குகிறேன்
நீலமேறிக் கொட்டுக்கின்றன
கோழைத்தனங்கள்
அவர்களுடனான
சமரசத்திற்காகவே
நீளுகின்றன எம்முடைய கைகள்
கண்ணிகளின் பேராபத்துக்குள்
என் திமிலங்கத்தைக் கிடத்துக்கிறேன்
அபத்தமான வேதங்களைக்
கற்பிக்க நிர்பந்திக்கப்படுகிறேன்
திமிரியவர்களின்
மரண அவலங்களால்
கண்களின் மேல்
பயத்தின் கோடாரியை
சொருகுகிறார்கள்
சபிக்கப்பட்ட முள் பாதைகளில்
நடை
பழகப் பழக
தேர்ச்சி பெற்றேன்
முடிந்தபாடில்லை
மரணங்களும்
அதைப் பின் தொடரும்
சூழ்ச்சிகளும் துரோகங்களும்
என்
தோளின் மேல்
நிற்கிறான்
முஷ்டியை உயர்த்திய
மகன்

No comments:

Post a Comment