Sunday, July 24, 2016

கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுப்பேனேன்
என்அம்மாவின் நினைவுகளை
நீந்த விடுகிறாள் அப்பெண்மணி

அதிகாலை
நடைப்பயிற்சி தயாரிப்பில் வாசலில் இறங்குகிறேன்

 இப்பெருநகரத்திற்கு குடி வந்த
மூன்று மாதமாகப் பார்க்கிறேன்
நீண்ட இந்தத்தெருவினைக் கண்ணாடி அழகில்
பல ஆண்டின் அனுபவம்  இருந்தது
அப்பெண்மனிக்கு

கடந்து போகும் ஒவ்வொரு நாளும்
என்னைப் பார்த்து சிரிக்கும்
அந்த நொடியில் என் தலைக்கணம்
உடைந்து கொண்டேயிருந்தது

சீவப்படாதத்தலையும்
காதறுந்த  பொருத்தமற்ற செருப்பும்
நைந்து  கிழியாத சீலையும்
என் கவன அடுக்கில் படியத்தொடங்கின
அவங்க பிம்பத்தின் ஒரு பகுதி

இந்தக்குடியிருப்பு பகுதியில் வசிக்கிறேன்
வீதியின் அழகினை  சொல்லி மெய்ச்சிலிப்பார்கள்
அப்பொழுதெல்லாம் -அவள்
தியாகம் வணங்குவேன்

தலையில் ஈரம் சொட்ட சொட்ட
மஞ்சள் வண்ணத்தில் புதிய ஆடை
மெல்லிய மஞ்சள் பூசிய முகத்தில்
ஒரு ரூபாய் அளவில் சிகப்பு குங்கும்ப்பொட்டும்
அப்பெண்மனி
பெண் தெய்வத்தின் மீதான விரத த்தில்
தெய்வமாகச்சாயல் கொள்ள
அப்பொழுது அந்த்த்தெருவில்
வணங்கி நிற்க
மனம் அலை அலையாக துடித்தது

கையில் தாங்கி நிற்கும்
நீண்டதொரு விளக்குமாரு பார்க்கிறேன்
கடவுள் நேரில் வந்தாலும்
குப்பைக்களை அள்ளச்சொல்லும்
இச்சமூகத்தின் எச்சமாக வாழ்வதலில்
பொருளற்றுப்போகிறேன்

Friday, December 25, 2015

பூனை

என் வீட்டின் இரண்டாவது அறையில் வாசித்துக்கொண்டியிருக்கிறேன்
ஓநாய் குலச்சின்னம்

வயதிறைந்த
கண்ணுக்குள் ஒளியேந்திய வெள்ளைநிற பூனையொன்று என் பின் அறையின் கதவின் வழியாக உள்நுழைந்து சமையலறையில் துழாவி
ஒன்றுமில்லாத அடுத்த அறையில் ஏமாந்து வரவேற்பறையில் வெளியேறும் பொழுதில் கவனித்தேன்

திறந்தே கிடக்கின்றன
பின் வாசல்கதவுகள்

அதை
இரண்டொரு முறை
பார்த்திருக்கிறேன்
கதவுகளை
இறுக்கமாகப் பூட்டு்க்கின்ற நிமிடத்தில்

கற்றோடு கொசுவும்
உள்ளே வரமால் இருப்பதற்குச் சாத்தப்பட்ட
ஜன்னல்களைக்கவனிக்கிறேன்

என்
வீட்டில் பூனையென்பது
அதிசயமாகப் பார்க்கிறேன்
பதட்டமில்லாமல்
தாய்மை அடைந்த ஒரு புலியென
நடந்த லாவகத்தில்
மெய் சிலிர்த்தே  போனேன்

அதன் கண்களில்
கருணை வழிந்த படி
மியாவ் மியாவ் என்ற
அதன் குரலில்
என்
அம்மாவைக்கண்டேன்
இணைந்து சிரிக்கிறார்
என்அப்பா

தாய்மையடைந்திருக்கும்
அப்பூனையின் வருகைக்காக திறந்துகிடக்கின்றன
ஜன்னல்கள்
இப்போது
தட்டில் நிறைத்த பாலுடன்.

Wednesday, December 23, 2015

நிறுத்தம்

இன்று
மெனக்கட்டு
திட்டமிடப்பட்ட
அத்தனைப்பயணங்களையும்
சட்டென்று
இல்லாமல் செய்துவிட்டது
இரண்டு
சக்கர வாகனத்தின்
முன் சக்கரத்தில்
இல்லாத   மென்காற்று

தேநீர்

தரையில்
கால் படாத மழையென
தெளிந்துகிடக்கிறது
கண்ணாடிக்குவளையில்
இலைகளிலிருந்து
வடித்தப்பச்சைத்தேநீர்

உன்
முகவரி
தேடித்தேடி
அலைந்த நாட்களைப்
பருகுகிறேன்

ஒவ்வொரு மிடறுகளுக்குள்
நீ
அச்சிறுயெறும்பென
நான்

மின்விசிறியைச்
சுழல விடுகிறாய்
ஆறாத தேநீருக்குள்
நீந்துகிறேன்

உன்உறவினர்களின்
நடுவே
அமர்த்திவிட்டு
அழகாய் கேட்கிறாய்
பார்வையை வீசி
இன்னொரு தேநீர்
வேண்டுமாயென
 கடலளவு வேண்டுமென்கிறேன்

கண்ணாடிக்குவளையில்
பரிமாறப்படுகிறது
உன்
கண்ணீரின் இரண்டு சொட்டுக்களை நிரப்பிய
தேநீர்

கடல்துளியைப்பருகும்
சிறுயெறும்பென
வாழ்கிறேன் நான்

Monday, December 21, 2015

பெண்கள் கதைகள்

மதுபானப்பாட்டில்களைச்
சுற்றிய நண்பர்கள்
மெல்லிய வெளிச்சத்தில்
கொஞ்சம் கொஞ்சமாகப்
பருகத் தொடங்கினோம்
அறை முழுக்க. பரவியிருந்தது
மௌனம்..

பெண்கள் தான்
மோசமென வாந்தியெடுத்தார்
எதிரே
இருந்த நண்பர்களில் ஒருவர்

புற்றீசல்கள்
அலையத்தொடங்கின
பெண்கள் குறித்தான கதைகள்

காதலித்தப் பெண்கள்
ஏமாற்றியப் பெண்கள்
ஏமாந்த பெண்கள்
நல்ல காதல்
கள்ள காதல்
ரசித்தப்பெண்கள்

ஒவ்வொருவரிடமும்
நிரம்பி தளும்பியன
ஓராயிரக்கதைகள்

கண்களுக்குள் மிதக்கின்றன
கோப்பைகள்
மதுக்கோப்பைகள்
தீரத் தீர
நீளுகின்றன கண்ணீரும் சிரிப்பும்

விடிய விடிய
மதுக்கிணற்றில்
முழ்கியத்தருணத்திலும்
உதடுகள்
உதிர்க்கவே இல்லை
தன்
வீட்டுப் பெண்களின் பெயர்களை
                        சோலைமாயவன்

Sunday, December 20, 2015

பூ

கடவுள் மாதிரி
ஒரு பூ

பூவுக்குள்  மலர்ந்த
கடவுள்
பூ வேண்டுமா
கடவுள் வேண்டுமா
கேட்டேன்
அன்பு மகளிடம்..

பூவை அள்ளி
சூடிக்
கடவுளாகிறாள்

அறையெங்கும்
உதிர்ந்து கிடந்தன
பூக்கள்
மகளின் பாதச்சுவட்டில்
உயிர்த்து எழுகிறார்கள்
கடவுள்கள்
பூப் பூவாய்....

கோபம்.

நிறைய
மரணங்களைப் பார்த்துவிட்டேன்
மரணங்களுக்குள்
பதுக்கப்பட்ட
சூழ்ச்சிகளையும் துரோகத்தையும்
ஊரறிய நட்டு வைத்து இருக்கிறார்கள்
நெடுஞ்சாலையின்
இருமருங்கிலும் நிழலற்ற மரமென
என்
விதைகளை நசுக்கியப்பின்னும்
ஓர் அங்குலம் கூட எழும்பவில்லை
என் முஷ்டி
தலைக்குனிந்து கிடக்கிறேன்
பூனையின் முகத்தில்
வளருகின்றன என் மீசைகள்
பயன்படுத்தப்  படாத
பிளேடால்
கைகளைக் கோடு கோடாக
 நறுக்குகிறேன்
நீலமேறிக் கொட்டுக்கின்றன
கோழைத்தனங்கள்
அவர்களுடனான
சமரசத்திற்காகவே
நீளுகின்றன எம்முடைய கைகள்
கண்ணிகளின் பேராபத்துக்குள்
என் திமிலங்கத்தைக் கிடத்துக்கிறேன்
அபத்தமான வேதங்களைக்
கற்பிக்க நிர்பந்திக்கப்படுகிறேன்
திமிரியவர்களின்
மரண அவலங்களால்
கண்களின் மேல்
பயத்தின் கோடாரியை
சொருகுகிறார்கள்
சபிக்கப்பட்ட முள் பாதைகளில்
நடை
பழகப் பழக
தேர்ச்சி பெற்றேன்
முடிந்தபாடில்லை
மரணங்களும்
அதைப் பின் தொடரும்
சூழ்ச்சிகளும் துரோகங்களும்
என்
தோளின் மேல்
நிற்கிறான்
முஷ்டியை உயர்த்திய
மகன்